புது மாப்பிள்ளை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் ஜெம்புலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் திருமண விழாவிற்கு தேவையான சமையல் பாத்திரங்கள். ஒலிபெருக்கி மற்றும் பந்தல் போன்ற பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் வினோத் குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வினோத்குமார் அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த டீக்கடையில் நரியப்பட்டி பகுதியில் வசிக்கும் கருப்பையா தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்தி கொண்டிருந்த போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு செய்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து டீக்கடைக்காரான ராஜேந்திரன் என்பவர் மது அருந்திவிட்டு இவ்வாறு என் கடையில் தகராறு செய்யக்கூடாது என்று கூறி அனைவரையும் அனுப்பி வைத்துள்ளார். இதில் கோபம் அடைந்த கருப்பையா டீக்கடைக்காரான ராஜேந்திரனை தாக்கியபோது அங்கு நின்று கொண்டிருந்த வினோத்குமார் எதற்காக இவரை தாக்கினீர்கள் என்று கருப்பையாவை தட்டிக் கேட்டார். இதனால் கருப்பையாவிற்கும், வினோத் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அதன் பிறகு கருப்பையா அங்கிருந்து புறப்பட்டு நரியப்பட்டிற்கு சென்று தனது அண்ணன்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரின் அண்ணன்களான மருதமுத்து ,சிலம்பரசன் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் திவாகர், முனியாண்டி, சிவகுமார், அஜித், ரஞ்சித்குமார் ஆகியோருடன் இணைந்து மீண்டும் ஆலங்குடி பகுதிக்கு சென்று அங்கிருந்த வினோத்குமார் மற்றும் அவரது அண்ணன் பூவிழியரசன் போன்றோரை கட்டையால் பலமாக தலை உள்ளிட்ட பல இடங்களில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த வினோத்குமார் மற்றும் பூவிழியரசனைஅருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு வினோத் குமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று வினோத் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை கட்டையால் அடித்துக் கொலை செய்த குற்றத்திற்காக கருப்பையா உள்பட 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.