தாத்தா-பாட்டியை உயிரோடு எரித்துக் கொலை செய்த பேரன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கொத்தாம்பாடி பாரதியார் நகர் பகுதியில் காட்டுராஜா-காசி அம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கியிருந்த வீட்டில் கடந்த 12-ஆம் தேதி தீ வைக்கப்பட்டு 2 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தாத்தா-பாட்டியை தீ வைத்து உயிரோடு எரித்துக் கொன்றது 16 வயதுடைய அவர்களது பேரன் தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அப்போது “எனக்கு சரியாக படிப்பு வராமல் ஊர் சுற்றி வந்தேன். இதனை எனது பெற்றோர் கூட கண்டிக்கவில்லை. ஆனால் என் தாத்தாவும்-பாட்டியும் என் மூத்தமகன் எப்படி சம்பாதித்து நல்ல நிலைமையில் இருக்கிறானோ அதைபோல் நீயும் ஆக வேண்டும் என்று என்னை கண்டித்தனர். மேலும் எங்கேயாவது வேலைக்கு சென்று தொழிலை கற்றுக்கொள் என்று தாத்தா-பாட்டி என்னை அடிக்கடி கண்டித்து வந்தனர்.
இதனையடுத்து கடந்த 12-ஆம் தேதி நான் மது குடித்துவிட்டு ஆற்றோரத்தில் பீடி புகைத்துக் கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த எனது பாட்டி என்னை துடைப்பத்தால் அடித்து கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அதன்பின் என்னை நண்பர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் தாத்தா-பாட்டி இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி எங்கள் வீட்டிலிருந்து 2 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் ஒரு பூட்டை எடுத்துக்கொண்டு தாத்தா-பாட்டி வீட்டுக்கு சென்றேன். அங்கு 2 பேரும் உறங்கியபின் வீட்டின் வெளிப்புறம் கதவை பூட்டி கூரை வீடு என்பதால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு நான் அங்கிருந்து சென்று விட்டேன். இதனால் தீயில் கருகி இருவரும் உயிரிழந்து விட்டனர்” என்று சிறுவன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.