போலி மருத்துவர் அளித்த சிகிச்சையால் பெண்ணுக்கு கண் பார்வை பறி போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிலா பாக்கியஜோதி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சை பெறுவதற்காக தெங்கம்புதூர் பகுதியில் அமைந்துள்ள ரஷீத் என்பவர் வைத்துள்ள எஸ் .ஆர்.எம் . மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரஷீத் ரெஜிலாவிற்கு 20 நாட்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
இந்நிலையில் திடீரென்று ரெஜிலாவின் உடல்நிலை மோசமாகி உள்ளது. மேலும் கண்கள் இரண்டும் வீங்கிய நிலையில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நிலையை பார்த்து அச்சமடைந்த ரெஜிலாவின் கணவர் அவருக்கு சிகிச்சை அளித்த ரஷீத்திடம் ரெஜினாவின் நிலையை பற்றி கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை. மனைவியின் உடல் நிலையை கண்டு மனமுடைந்து போன அவரது கணவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு ரெஜிலாவை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததன் மூலம் பார்வை பறி போயுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதி நவீன மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவமனைக்கு ரெஜிலாவை கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மருவத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பார்வையிழந்த மனைவியை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்துச் சென்றார். அங்கு பார்வை இழந்து வீங்கியிருந்த ரெஜிலாவின் கண்ணை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.