கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது .
திருச்சி மாவட்டத்திலுள்ள புத்தாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் நேற்று மாலையில் அங்குள்ள வயல்வெளியில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார் . அப்போது ஆடு ஒன்று எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் ஆட்டை காப்பாற்ற முடிவு செய்தார் .பின்பு கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார் .ஆனால் 10 அடி ஆழம் இறங்கிய நிலையில் அவரது கைவழுக்கியுள்ளது .
இதனால் சுரேஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார் . அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றுக்குள் இருந்த சுரேஷையும் மற்றும் அவரது ஆட்டையும் பத்திரமாக மீட்டனர். தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்ததால் சுரேஷின் இடுப்பு பகுதி பலமாக காயமடைந்தது . இதனால் அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.