மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி கன்னிமார் கூட்டம் கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மூக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாடசாமி இறந்துவிட்டதால் மூக்கம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பேச்சியம்மாள் கணவனை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் கோவில்பட்டி அருகில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கணேசன் வேலைக்கு சென்றுவிட்டு அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்று தாயாரை பார்த்து வருவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் அடிக்கடி மது குடித்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் தாயார் மூக்கம்மாளிடம் கணேசன் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து அவரை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மூக்கம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூக்கம்மாளின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.