மது குடித்ததை கண்டித்த தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கம் கலெக்டர் நகர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராமதாஸ், ஜெயபால் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ராமதாசுக்கு திருமணமாகி அடுத்த வீதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கூலி தொழிலாளியான ஜெயபாலுக்கு இன்னும் திருமணம் ஆகாததால் அவர் தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் அடிக்கடி மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.
இது சம்பந்தமாக கடந்த சில நாட்களாக ஜெயபாலுக்கும், அவரது தாய் மல்லிகாவிற்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் ஜெயபால் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நேரம் ஆனந்தன் வீட்டில் இல்லை. அப்போது மல்லிகா ஜெயபாலிடம் “ஏன் இப்படி அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாய்” என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அதன்பின் மீண்டும் மது அருந்திவிட்டு வந்து தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஜெயபால் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை தாயென்றும் பாராமல் மல்லிகாவை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன்பின் ஜெயபால் குடிபோதையில் இரவு முழுவதும் தாயின் பிணத்துடன் இரவு முழுவதும் வீட்டிலேயே தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் தாயை பார்க்க வீட்டிற்கு வந்த மூத்த மகனான ராமதாஸ் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப் பட்டிருந்ததால் கதவை தட்டியுள்ளார். இந்நிலையில் ஜெயபால் கதவை திறந்தபோது குடிபோதையில் தனது தம்பி தாயை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமதாஸ் வெள்ளவேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.