மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புபட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முத்து- முத்தம்மாள். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். தம்பதியரின் இரண்டாவது மகனான ரத்தினவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார். ரத்தினவேல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் முத்தம்மாள் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகை வாங்கியதை அறிந்த ரத்தினவேல் அங்கு வந்து முத்தம்மாளிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் முத்தம்மாள் தர முடியாது என்று கூறியதால் ஆத்திரமடைந்த ரத்தினவேல் தாயென்றும் பாராமல் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முத்தம்மாள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர்.