ஒரு மாத காலமாக அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு ஒரு வழியாக மகாராஷ்டிராவில் ஆட்சியமைவதற்கான சாதகமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கடும் போராட்டத்திற்குப் பின் தான் நினைத்ததை சாதித்துள்ளது சிவசேனா. சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவுக்கரம் நீட்டி, காங்கிரஸோடு கூட்டணியமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பாலமாக செயல்பட்டுள்ளார்.
பாஜகவை ஆட்சியமைக்க விடக் கூடாது என்ற ஒற்றைப் புள்ளியில் மூன்று கட்சிகளும் இணைந்து முடிவெடுத்து, அதில் வெற்றியும் கண்டுள்ளன. ராஜினாமா செய்த கையோடு அஜித் பவாரும், சரத் பவாரை சந்தித்து சமாதானம் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறிவித்த பின், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்து அஜித் பவாரும் ஃபட்னாவிஸும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தார்கள். உடனடியாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. அதில், முக்கியமாக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை (நவ. 28ஆம் தேதி) பதவியேற்க வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, புதிதாக அமைந்துள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவையில், வெற்றி பெற்ற 288 உறுப்பினர்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, இன்று காலை மகாராஷ்டிரா சட்டசபைக்கு வருகை தந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, இடைக்கால சபாநாயகரான காளிதாஸ் கோலம்பகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்மூலம், மூன்று கட்சி கூட்டணித் தலைவர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், தேவேந்திர ஃபட்னாவிஸ், சுப்ரியா சுலே, அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கட்சி தொடங்கி 53 ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனா கூட்டணி பலத்தோடு ஆட்சியமைப்பது குறிப்பிடத்தக்கது.