அபுதாபி அரசு கொரோனா தொற்றை கண்டறிய உதவும் பேஷியல் ஸ்கேனருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பல்வேறு நாடுகளிலும் கொரோனா மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ள நிலையில் அபுதாபியில் கொரோனா பரிசோதனையை எளிமையாக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது அபுதாபியில் இ.டி.இ ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள “பேஷியல் ஸ்கேனர்” எளிமையான வழியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் மூலம் மால்களுக்கு வரும் மக்களுக்கு எளிதில் பரிசோதனை மேற்கொள்ள முடியும். அதோடு மட்டுமல்லாமல் அந்த கருவியை முசாபா மற்றும் யாஸ் தீவு பகுதிகளில் உள்ளவர்களிடம் முதலில் சோதனை செய்து பார்த்துள்ளனர்.
அதில் 20 ஆயிரம் பேர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், 90 சதவீதம் கொரோனா வைரஸ் உள்ளவர்களிடமிருந்து துல்லியமான முடிவுகள் கிடைத்ததாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த ஸ்கேனரை ஸ்மார்ட்போன்களில் இ.டி.இ அப்ளிகேஷன் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அப்பிளிகேஷனானது ஒரு கருவியின் உதவியுடன் செயல்படுகிறது. அதாவது மனித உடலில் ஆர்.என்.ஏ. எனும் வைரசின் புரத பொருள் இருப்பது கண்டறியப்பட்டால் மின்காந்த அலை வீச்சில் மாற்றம் உண்டாகும். மேலும் சுமார் 5 மீட்டர் தொலைவில் அந்த ரீடர் பொருத்தப்பட்டு சோதனை நடைபெறுகிறது.
ஸ்மார்ட் போன்களில் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி முகத்தை ஸ்கேன் செய்தால் சில வினாடிகளில் ஸ்கேன் செய்த நபர்களுடைய ஸ்மார்ட் போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அவருக்கு கொரோனா உள்ளதா ? இல்லையா ? என்பதை ஒரு சில நிமிடங்களிலேயே தெரிந்து கொள்ள முடியும். அதில் பச்சை நிற ஒளி பிரகாசித்தால் கொரோனா தொற்று இல்லை என்றும், சிவப்பு நிற ஒளி பிரகாசித்தால் கொரோனா தொற்று உள்ளது என்றும் அர்த்தம். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு பிசிஆர் பரிசோதனையானது 24 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளுமாறு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.