மின் கம்பத்திலிருந்து வந்த தீ பொறி காரணத்தால் அருகில் இருந்த தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கெரகோட அள்ளி பகுதியில் வசிக்கும் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் பாய், மெத்தை, தலையணை ஆகிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 15-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியதால் அருகிலிருந்த மின் கம்பத்தில் திடீரெனத் தீப்பிடித்து கொண்டது.
இதனால் தொழிற்சாலையில் மெத்தை தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மூலப் பொருட்களின் மீது தீப்பொறி விழுந்து திடீரென மளமளவென எரியத் தொடங்கியுள்ளது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்புதுறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தண்ணீர் மூலமாக தீயை அணைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தீ விபத்தில் அங்கே வைக்கப்பட்டிருந்த மூலப் பொருட்களும், இயந்திரங்களும் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் பற்றி தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முழு ஊரடங்கு காரணத்தினால் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் இல்லாததால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.