சென்னையில் மருமகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாமியார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினார்.
சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவர். இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். சென்னை மற்றும் மதுரையில் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆவடி அடுத்த காட்டூர் அந்தோணி நகரில் உள்ள காலி மைதானத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி பிரகாஷை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக், அரவிந்த், குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது கைது செய்தனர்.அதன் பின் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக பிரகாஷை அவரது சகலை கார்த்திக் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் இவ்வழக்கில் பிரகாஷின் மாமியாருக்கும் தொடர்பு உள்ளது என்று தெரியவந்தது. மாமியார் சகுந்தலா தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.