ராமர் கோவில் பூமி பூஜை விழா அரசியல் சாசனத்தை மீறும் செயல் நடந்துள்ளது என சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். இந்நிலையில், ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா சடங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டது அரசியல் சாசனச் சட்டத்தை மீறிய செயலாக உள்ளது என சிபிஎம் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி கூறியுள்ளார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் சீதாராம் யெச்சூரி வெளியிட்டிருப்பது:- “ஆளுநர், முதல்வர் முன்னிலையில் ராமர் கோவில் கட்டுமானத்தை அரசு எடுத்து நடத்துவது அரசியல் அமைப்பை மீறும் செயல் ஆகும்.
உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்டும் பொறுப்பை அறக்கட்டளையிடம் விட வேண்டும் என்று கூறியிருந்தது. பாபர் மசூதி இடிப்பு சட்ட விரோதம் அதைச் செய்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், யாருக்கும் தண்டனை வழங்கப்படும் முன்பே, ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி விட்டது.. இந்த பூமிபூஜை நிகழ்வு மக்களின் மத உணர்வுகளை நேரடியாகச் சுரண்டும் மலிவான அரசியல் நோக்கம் கொண்டது. அரசியல் சாசனத்தின் எழுத்தையும் உணர்வையும் வெளிப்படையாக மீறும் செயலாகும்” என்று அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.