முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் மேடு பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னராசு என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் புத்தேரி குமரன் நகரில் அமைந்திருக்கும் மைதானத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிட தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவர் முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சின்னராசுவை கொலை செய்வதற்காக தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் மைதானத்திற்கு வந்துள்ளார்.
இதனை பார்த்த சின்னராசு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். ஆனால் அவர்களிடம் மாட்டிக்கொண்ட சந்தோஷ் குமாரை கோவிந்தராஜ் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தனது நண்பர்களுடன் தப்பித்து சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த சந்தோஷ் குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சந்தோஷ் குமாரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிந்தராஜனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.