திருவண்ணாமலையில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கடலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் இளைஞர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம். 17 1/2 வயதுமுதல் 23 வயதுவரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சிப்பாய், தொழில்நுட்பம், சிப்பாய் செவிலியர், உதவியாளர், சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் எழுத்தர் ,சிப்பாய் வர்த்தகர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறது.
இந்த ஆள் சேர்ப்பு முகாமில் ராணுவத்திற்கு ஆட்கள் எடுக்க எந்தவிதமான எண்ணிக்கைக் கட்டுப்பாடும் இல்லை. எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டாலும், அத்தனை பேருக்கும் வேலை உண்டு. எனவே அனைத்து தகுதியுள்ள இளைஞர்களும் அதிகமான எண்ணிக்கையில் இந்த வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி வேலையை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதால், யாரும் எதையும் மாற்ற இயலாது. எனவே திறமையுள்ள, தகுதி வாய்ந்தவர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.