அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முழுவதும் மாநில அரசின் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அத்திக்கடவு அவிநாசி நீரேற்றும் திட்ட பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ” ரூ. 1,652 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டம் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் 2021ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் எனக்கூறினார். மேலும் பேசிய அவர், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது என கூறினார்.
3 மாவட்ட மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் பவானி ஆற்றின் குறுக்கே 5 இடங்களில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக அரசின் பரிசீலனையில் உள்ளது என தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு ரூ.11,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.