ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது.
உலக கோப்பை 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2-வது ஓவரில் பிஞ்ச் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் வேகத்தில் டேவிட் வார்னர் 09, பீட்டர் ஹேண்ட்ஸ் காம்ப் 4 என இருவரும் விக்கெட்டை பறி கொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித்துடன் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். அடுத்து 8-வது ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் பவுன்சராக வீசிய கடைசி பந்தை எதிர் கொண்ட போது அலெக்ஸ் கேரிக்கு தாடையில் பந்து பட்டு ரத்தம் வழிந்தது.
இருப்பினும் முதலுதவிக்கு பின் மீண்டும் ஆடினார். பின்னர் அலெக்ஸ் கேரியும், ஸ்டீவ் ஸ்மித்தும் பொறுமையாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆதில் ரஷித் ஓவரில் சிறப்பாக ஆடிய கேரி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதை தொடர்ந்து அதே ஓவரில் மார்கஸ் ஸ்டாய்னிசும் 0 ரன்னில் வந்த வேகத்தில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் பொறுமையாக ஆடி அரைசதம் கடந்தார். அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் சிறிது நேரம் தாக்கு பிடித்து 22 ரன்களில் வெளியேறினார்.
அதன் பிறகு இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஸ்மித்தும், ஸ்டார்க்கும் ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்த்தனர். கடைசி கட்டத்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த ஸ்டீவ் ஸ்மித்தும் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்சல் ஸ்டார்க்கும் அவர் பங்குக்கு 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆதில் ரஷித் ஆகியோர் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் இறுதி போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் 224 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.