ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில்அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது.
12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர்.
டேவிட் வார்னர் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஷெல்டன் காட்ரெல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஆரோன் பிஞ்சும் 6 ரன்களில் ஓசன் தாமஸ் வேகத்தில் வெளியேறினார். இதையடுத்து வந்த உஸ்மான் க்வாஜாவும் 13 ரன்னில் ஏமாற்றமளித்தார். அடுத்து இறங்கிய ஸ்டீவ் ஸ்மித் மட்டும் பொறுப்புடன் விளையாடினார். அதன் பிறகு இறங்கிய மேக்ஸ்வெல் 0, ஸ்டோய்னிஸ் 19 ரன்னிலும் நடையை கட்டினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி முன்னணி விக்கெட்டை இழந்து தடுமாறியது.
ஆஸி அணி 16.1 ஓவரில் 79/5 ரன்கள் எடுத்து தடுமாறியது. இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தும், அலெக்ஸ் காரேவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. அலெக்ஸ் காரே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய நாதன் கோல்டர் – நிலேவும், ஸ்மித்தும் நிலைத்து ஆடினர். இதனால் ஆஸி அணியின் ரன் விகிதம் கணிசமாக உயர்ந்தது. இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது. அதன் பிறகு ஸ்மித் 73 ரன்னில் ஆட்டமிழந்தார்.
யாரும் எதிர் பார்க்காத நிலையில் கோல்டர் – நிலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே கம்மின்ஸ் 2 ரன்னில் வெளியேறினார். சதம் அடிப்பார் என்று எதிர் பார்த்த நிலையில் கோல்டர் – நிலே 60 பந்துகளில் 92 ரன்கள் (8 பவுண்டரி 4 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார். அவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதை தொடர்ந்து மிட்சல் ஸ்டார்க் 8 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளும், ஓசன் தாமஸ், ஷெல்டன் காட்ரெல் மற்றும் ஆண்ட்ரே ரஸெல் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 289 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.