தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மாயாண்டிபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி அமாவாசை. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பையில் 74 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான வைப்புத்தொகை சான்றுகளை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் தனது கிராமத்திலிருந்து ஆண்டிபட்டி வந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கும்போது தான் கொண்டுவந்த பையை ஆட்டோவிலேயே மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
பின் சிறிதுநேரம் கழித்து பையை தவறவிட்டதையறிந்து ஆட்டோவைத் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியாததால் அதிர்ச்சியடைந்த அவர் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து காவல்துறையினர் ஆண்டிபட்டி நகரில் ஆட்டோவைக் கண்டுபிடிக்க, சிசிடிவி பதிவுக் காட்சிகளை ஆய்வுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பையைத் தவறவிடப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் அழகர்சாமி ரூ.74 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான வைப்புத்தொகை பத்திரங்களை இன்று ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.