நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 102 அடியை எட்டியது. 105 அடி உயரமுள்ள அணையில் 102 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கமுடியாத நிலையில் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த 7,000 கனஅடி உபரி நீர் இன்று அதிகாலை வெளியேற்றப்பட்டது. அணை நீர் திறப்பு காரணமாக பவானி ஆற்றங்கரையோரம் உள்ள பவானிசாகர், இக்கரை நெகமம், சத்தியமங்கலம், கொடிவேரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரம் உள்ள கிராமங்களில் தண்டோரா முலம் தாழ்வான இடங்களில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் ஆற்றில் குளிக்கவும், கால்நடை மேய்ச்சலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாலை முதலே போலீசார் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பவானிஆற்றில் மீன் பிடிக்க வேண்டாம் என்றும் வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கிராம உதவியாளர்கள் ஆற்றங்கரையோரம் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அணையிலிருந்து 12,350 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.