பாஜக, ஆர்.எஸ்.எஸ் சேர்ந்து “இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து. ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்து, தனக்கு பதிலாக து. ராஜாவின் பெயரை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்தார். இதையடுத்து டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதில் கேரளாவைச் சேர்ந்த பினோய் விஷ்வம், அக்கட்சியின் மூத்த தலைவர் அமர் ஜித் கவுர், அதுல்குமார் அஞ்சான் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் து.ராஜா அகில இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக நியமிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் அதிகாரப்பூர்வமாக அகில இந்திய பொதுச்செயலாளராக து. ராஜா அறிவிக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் பொது செயலாளர் சுதாகர் ரெட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.