வித்யாசாகர் சிலையை கட்டமைக்க பாஜகவின் பணம் எங்களுக்கு தேவையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலையை உடைத்தது பா.ஜ.கவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆனால் பா.ஜ.க வினர் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் நடந்த கலவரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என உறுதியுடன் தெரிவித்தார் .
இந்நிலையில் இது குறித்து மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது பேசினார். அப்போது அவர் பேசியதாவது “கொல்கத்தாவில் உடைந்த வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைத்து தருவதாக மோடி உறுதியளித்துள்ளார். எங்களுக்கு எதற்கு பா.ஜனதாவின் பணம்? அவர்கள் பணம் எங்களுக்கு தேவையில்லை. மேற்கு வங்காளத்திம் போதுமான வளம் உள்ளது. சிலைகளை உடைப்பது பா.ஜ.க வின் பழக்கமாகும். அவர்கள் திரிபுராவிலும் அதைதான் செய்துள்ளார்கள். பா.ஜ.க மேற்குவங்காளத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை சிதைத்துள்ளது. இதுபோன்ற ஒருகட்சியை ஆதரிப்பவர்களை இந்த சமூகம் துளியும் ஏற்காது. பா.ஜ.க சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பி வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது,” எனக் கூறியுள்ளார்.