Categories
தேசிய செய்திகள்

அலங்கார பேச்சுகள் மூலம் ஏமாற்றி விடலாம் என பாஜக அரசு நினைத்து கொண்டிருக்கிறது: ஸ்டாலின்!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.5000, நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் செய்யாமல், விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யவேண்டும் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற துயரத்திலும், திகைப்பிலும் இருக்கும் விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும் ஆக்கபூர்வமான நிவாரணங்களை கொடுக்காமல் அலங்கார பேச்சுகள் மூலம் ஏமாற்றி விடலாம் என மத்திய பாஜக அரசு நினைத்து கொண்டிருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

20 லட்சம் கோடி நிவாரணம் என்ற பாஜகவின் அரசியலுக்கான தலைப்பு செய்தி, ஏழை எளிய மக்களுக்கு ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார். வீடு தீப்பிடித்து எரியும்போது, உடனடியாக கிடைக்கும் தண்ணீரையும், மண்ணையும் வாரி இறைத்து அணைத்திட முயற்சிப்பதை போன்றது, பணமாக கொடுக்கப்படும் நிவாரண நிதி.

ஆனால் வீடு தீ பற்றி எரியட்டும், அவசரப்படவேண்டாம், தீயணைப்பு நிலையத்திற்கு செய்தி அனுப்பி இருக்கிறோம் அங்கிருந்து வண்டி வரட்டும் பொறுத்திருங்கள் என்று சொல்வதை போல இருக்கின்றன மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள் என குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே வாங்கிய கடனையே திருப்பி செலுத்த முடியாமல் பல நூறு கணக்கில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகள் தலையில் மீண்டும் கடன் என்ற பெயரில் பாறாங்கல்லை ஏற்றி வைப்பது எந்த வகை நிவாரணம்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியர்களுக்கு உணவளித்திட வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா அரசின் கடமை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |