நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி எதிர்ப்பு அதிகரித்து உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரில் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ள வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை திரும்பப் பெறக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ஏற்கனவே தமிழக மக்கள் மோடியின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த செயல்களால் மோடிக்கு எதிரான அலை அதிகரித்துள்ளது என்றும், குறிப்பாக முதல்வர் சட்டத்தில் திருத்தம் செய்தது பெண்கள் மத்தியிலும், அரசியலுக்கு அப்பாற்பட்ட மருத்துவர்களை போராட்டத்திற்கு வரச் செய்ததால் மருத்துவர்கள் மத்தியிலும், புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் மத்தியிலும் மிகப்பெரிய கோபத்தை மோடி அரசு ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை தினந்தோறும் மக்களை துன்புறுத்தி வருகிறது என்று தெரிவித்த அவர், இதற்கு முன்பாக தமிழகத்தில் நடைபெற்ற எந்த தேர்தலிலும் அதிமுக பாஜக டெபாசிட் இழந்தது இல்லை. ஆனால் இவ்வகையான செயல்களின் காரணமாக முதன்முதலாக பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக வேலூர் தேர்தலில் டெபாசிட் இழக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.