விழுப்புரம் அருகே ஆவின் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக ரூ14,00,000 மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விராட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அதே கிராமத்தில் அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு ஊர் மக்களுக்கு அருள் வாக்கும் சொல்லுவார். பூண்டி கிராமத்தைச் சேர்ந்த குணபாலன் என்பவர் மூலமாக சென்னையைச் சேர்ந்த குலாப் சிங் என்பவரது பழக்கம் செல்வத்திற்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் குலாப் சிங் ஆவின் கம்பெனியில் ஆடிட்டர் ஆக பணிபுரிந்து வருவதாகவும், அங்கு பலருக்கு வேலை வாங்கி தந்துள்ளதாகவும் தெரிவிக்க, செல்வத்திடம் உங்கள் உறவினர்கள் யாருக்கேனும் நிரந்தர பணி வேண்டுமென்றால் நபருக்கு ரூபாய் 4 லட்சம் தரவேண்டும் முன்பணமாக ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்தால் பணி நியமனத்திற்கான ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்தார் .
இதை உண்மையென நம்பிய செல்வம் தனது உறவினர்களான வினோத், மாலதி, அரவிந்த், செல்வம், ஷாலினி, முகேஷ் உள்ளிட்டோரிடம் தெரிவிக்க இதற்கு சம்மதம் தெரிவித்து அவர்கள் பணத்தை தர ஒப்புக் கொண்டனர். அதன்படி முதலில் வினோத், ஷாலினி ஆகிய 2 பேரிடம் தலா 3 லட்சம் என முதலில் 6 லட்சத்தை பெற்று விட்டு பின் பணி நியமனத்திற்கான ஆணையை கொடுத்துவிட்டு பின் மீதமுள்ள இரண்டு லட்சத்தை வாங்கியுள்ளார்.
இதையடுத்து மற்ற நான்கு பேரிடமும் மொத்தம் ரூபாய் 6 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்டு நியமன ஆணையை தராமல் காலம் தாழ்த்தினார். இதையடுத்து 4 பேரும் ஏற்கனவே நியமன ஆணை பெற்ற இரண்டு பேரிடம் சென்று இதுகுறித்து முறையிட அவர்கள் நியமன ஆணையை சோதனை செய்தபோது அது போலியானது என்று தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் குலாப் சிங்கை தொடர்பு கொண்டு கேட்ட போது எனது நண்பர் அருள்பிரகாசம் என்பவரிடம் அனைத்து பணமும் இருப்பதாகவும், அதனை விரைவில் தங்களிடம் கொடுத்து விடுவதாகவும் போலியான நம்பிக்கையை கொடுத்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து குலாப் சிங்கை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுக்கொண்டே இருக்க ஒருநாள் செல்வத்திடம் ரூ12 லட்சத்திற்கான காசோலையை கொடுத்துள்ளார்.
அந்த காசோலையை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் செல்லும் போது போதிய இருப்பு இல்லாததாக கூறி காசோலை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள் விழுப்புரம் மாவட்ட காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தலைமறைவான குலாப் சிங் மற்றும் அருள் பிரகாசத்தை தேடி வந்த நிலையில் குலாப் சிங் மேல்மருவத்தூர் அருகே வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது தலைமறைவாகியுள்ள அருள் பிரகாசத்தை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.