நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இறையமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவரது மனைவி வனிதா (எ) சோபனா. இவர், திருச்செங்கோட்டில் உள்ள சுபானா பியூட்டி பார்லரில் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார். 29 வயதான இவருக்கு தேவா, சச்சின் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை சோபனா வேலைக்குச் சென்றுள்ளார். இரவு மீண்டும் வீடு திரும்பியபோது கடைசி பேருந்தை தவறவிட்டதாகவும், தனக்கு தெரிந்த ஒருவரின் காரில் வருவதாக இரவு 8 மணிக்கு தனது கணவர் செந்திலிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்டநேரமாகியும் சோபனா வீட்டிற்கு வரவில்லை.
இதனால் பதற்றமடைந்த செந்தில் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளிலும் விசாரித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மொளசி காவல் நிலையத்தில் மனைவி சோபனா காணாமல் போனது குறித்து புகார் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளிபாளையம் குட்டையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மொளசி காவல்துறையினர் சடலம் குறித்து நடத்திய விசாரணையில் இறையமங்கலத்தைச் சேர்ந்த சோபனா என்பது தெரியவந்தது. இவர், சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள குச்சிக்கிழங்கு காட்டில் தனது மகனுக்காக வாங்கிய துணிகள் மற்றும் சாக்லேட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன. மேலும், இவரது கைப்பை விட்டம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது.
ஷோபனாவும் செந்திலும் வேறு, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 10 ஆண்டிற்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து கலப்புத் திருமணம் செய்துக்கொண்டனர். அதன் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணத்தில் மொளசி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.