பூட்டியிருந்த வீட்டில் 5 நாட்களுக்கும் மேலாக பிணமாக கிடந்த மூதாட்டியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கவேல் என்ற மகன் உள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இதில் தங்கவேலுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் தங்க வேலுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணத்தினால் அவர்கள் பிரிந்து விட்டனர். அதன்பின் தங்கவேலு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அதனால் பால சரஸ்வதி தனது மகனிடம் பேசாமல் பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பால சரஸ்வதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவ அவசர ஊர்தி மூலமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அதற்குப் பிறகும் அவரை யாரும் சரிவர கவனிக்கவில்லை. இதனையடுத்து திடீரென பால சரஸ்வதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதினால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே பார்த்த போது அங்கே கட்டிலில் பால சரஸ்வதி பிணமாக கிடந்துள்ளார். இவர் உயிரிழந்து 5 நாட்களுக்கு மேளாகி இருந்ததால் காவல்துறையினர் பால சரஸ்வதி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.