டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் கூட்டுப் படுகொலை என போலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உறவினரான 26 வயதான பிரபு நாத் என்ற நபரே இந்த கொலையை செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடன் வாங்கிய தொகையை திருப்பித் தராததால் ஏற்பட்ட பிரச்சனையே இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி பஜன்புரா (Bhajanpura) பகுதியில் வசித்து வந்த 43 வயதான ஷம்பு சவுதாரி, அவரது மனைவி சுனிதா (37), பிள்ளைகள் சிவம் (17) சச்சின் (14) மற்றும் மகள் கோமல் (12) ஆகியோர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். துர் நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கடந்த 12ஆம் தேதி (புதன்கிழமை) போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. முதல் கட்ட விசாரணையில் மாயமாகியிருந்த பிரபு நாத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில், இரும்பு கம்பியால் ஷம்புவின் தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்ததாக பிரபு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பிரபு ஷம்புவுக்கு கொடுத்திருந்த 35 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி கேட்டு பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி ஷம்புவின் வீட்டிற்கு சென்ற பிரபு முதலில் அவரது மனைவியை கொலை செய்துள்ளார். அதைதொடர்ந்து அவரது 3 பிள்ளைகளையும் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, இறுதியாக ஷம்புவையும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
பிரபு நாத் தப்பி செல்லும்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அவர் வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சி பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் பிரபுவை கைது செய்து விசாரித்ததில், அவர் செய்த கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கொடுத்த கடனை தரவில்லை என்பதற்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.