ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்தது முதல் இறுதி வரை என்ன நடந்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டியில் அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 : 40 மணிக்கு சிறுவன் (சுஜித் வயது 2) ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதையடுத்து மாலை 5 :55 மணிக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவனுக்கு ஆக்சிஜன் தரப்பட்டது. அதை தொடர்ந்து இரவு 7 : 15 மணிக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பின்னர் இரவு 8 மணிக்கு மதுரை மணிகண்டன் குழுவினர் சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் சிறுவன் சுஜித்தை மீட்க முடியவில்லை.
ஒரு கையில் கயிறு காட்டப்பட்டாலும் மறு கையில் கட்ட முடியவில்லை. இதனால் மீட்பு பணி 2 வது நாள் (அக். 26) ஆம் தேதியும் தொடர்ந்தது. இரண்டாவது நாள் மீட்பு பணியின் போது நண்பகல் 12 : 30 மணியளவில் குழந்தை 60 அடி ஆழத்திற்கு சென்றது. தொடர்ந்து அதேநாளில் (அக். 26) இரவு 7 மணிக்கு 80 அடிக்கும் கீழே குழந்தை சுஜித் நழுவிச் சென்றான். இதன் காரணமாக மீட்பு பணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின் சுஜித் மேலும் கீழே செல்லாதிருக்க (அக். 26) இரவு 9.10 மணியளவில் சிறுவன் கை ஏர்லாக் முறையில் இருக்க பிடிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு துளையிட்டு சிறுவன் சுஜித்தை மீட்க (அக்.27) அதிகாலை 2 : 15 மணிக்கு ரிக் இயந்திரம் நடுகாட்டுப்பட்டி வந்தடைந்தது.
மீட்பு பணி நடைபெறும் போது இடையில் லேசாக குறுக்கிட, உள்ளே மழை நீர் செல்லாதவகையில் தார் பாய் கட்டப்பட்டு சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது. ரிக் இயந்திரம் (அக் 27) நண்பகல் 12: 30 மணியளவில் முதல் ஐந்தரை மணி நேரத்தில் சுமார் 20 அடிக்கு குழி தோண்டியது. பூமிக்கு அடியில் ராட்சச பாறைகள் இருந்ததால் துளையிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
நேரம் கடந்து கொண்டே சென்றது. இதனிடையே ரிக் இயந்திரம் பழுதடைந்து பணி தொடங்கியது. இதையடுத்து சீக்கிரமாக துளையிடுவதற்காக முதல் ரிக் இயந்திரத்தை விட அதிக சக்தி வாய்ந்த இரண்டாவது இயந்திரத்தின் முதல்கட்டப் பணி (அக். 28) நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. ரிக் இயந்திரங்கள் மூலம் (அக்.28) காலை 7 : 10 மணி வரையிலும் 24 மணி நேரத்தில் 40 அடி ஆழம் மட்டுமே தோண்டப்பட்டது.
இதையடுத்து போர்வெல் கொண்டுவரப்பட்டு துளையிடப்பட்டு, அதனை ரிக் இயந்திரம் அகலபடுத்தியது. (அக்.28) மாலை 7 : 20 மணி வரையிலும் ரிக் இயந்திரம் மூலம் 63 அடி வரை குழி தோண்டப்பட்டது. இதனிடையே மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் உள்ளே இறங்கி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து துளையிடப்பட்டு வந்த நிலையில் துர் நாற்றம் வீசியது. இதனை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் (அக்.29) அதிகாலை 2 : 30 மணிக்கு குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து அக். 29 அதிகாலை 4 : 30மணி அளவில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தை சுஜித் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து உடனே ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் மூலம் இறந்த சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பாத்திமா புதூர் கல்லறைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.