ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், குண்டூர் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் படித்துவரும் மாணவி ஒருவர், சக மாணவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனிமையில் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்..
அந்த வகையில், ஒரு நாள் தன்னுடைய காதலனை சந்திப்பதற்கு மாணவி, தனியாக சென்றுள்ளார். அப்போது, காதலன் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்குக் கொடுத்துள்ளார்.. மயக்க மடைந்த பின் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, நிர்வாணமாக தனது மொபைல் போனில் படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளான்.
இந்த சூழலில் சில நாட்களுக்குப் பிறகு இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனால், கடும் ஆத்திரமடைந்த காதலன், தான் படம்பிடித்த நிர்வாண வீடியோவை, தன்னுடைய நண்பனுக்கு அனுப்பியுள்ளான்.
இதையடுத்து, அந்த நண்பனும் வீடியோவைக் காட்டி, மாணவியை தனது பாலியல் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சித்துள்ளான்.. மாணவி சம்மதிக்காததால், ஆபாச தளத்தில் வீடியோவை பதிவேற்றி விடுவதாக மிரட்டியுள்ளார். சுமார் 3 ஆண்டுகளாக மாணவி இந்த சம்பவத்தால் துன்புறுத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அதே வீடியோவை அனுப்பி பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் முழு விவரத்தையும் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட 2 மாணவர்களையும் கைது செய்தனர்.. மேலும், குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 3ஆவது நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.