நாளை கல்யாணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்துள்ள குடிசாதனப்பள்ளி அருகே இருக்கும் தொரப்பள்ளியை சேர்ந்த 23 வயதுடைய ராமு (விவசாயி) என்பவருக்கும், சொந்தக்கார பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் திருமண பத்திரிகையை மணமகன் ராமு மற்றும் குடும்பத்தினர் வழங்கி வந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது..
இந்நிலையில் தான் நேற்று காலை அவரது விவசாய நிலத்திலிருந்த புங்கன் மரத்தில், ராமு தூக்கில் சடலமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பேரிகை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ராமுவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
திருமண வேலைகள் தடபுடலுடன் சிறப்பாக நடந்து வந்த நிலையில், ராமுவிற்கு திருமண செலவுக்காக எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்கவில்லை என்றும், அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என, காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் ராமு தற்கொலை தான் செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என பேரிகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாளை கல்யாணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் தற்கொலை செய்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.