அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வந்து அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளை மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து, மாநிலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தொலைத் தொடர்பு வசதிகள், இணைய வசதிகள் என அனைத்தும் முடக்கப்பட்டன.
மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர். வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனப் பல்வேறு தரப்பினர் சார்பில் அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதன் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று தொடங்கியது. என்.வி. ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் ஆஜரானார்.