மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் முக்கிய கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு நாளை அறிக்கை வெளியிடும் என கூறியிருந்தார்.
அதன்படி ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மீன் இறைச்சி கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், வங்கிகள், ஏ.டி.எம்கள், காப்பீட்டுத் துறைகள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. உணவு, மருந்துகளை இணைய வர்த்தக நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நியாய விலைக்கடைகள் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய பணிகளை மேற்கொள்ள தடை இல்லை. அனைத்து கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து சேவைகள் இயங்க தடை விதிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.