மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 114 சதவீதம் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலமாக கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஆனது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், பல்வேறு நகரங்களில் இருந்த மக்கள் பெரும்பாலானோர் தங்களின் கிராமங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உதவக்கூடிய நோக்கத்தில் மத்திய அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. அதனால் அந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒரு நாள் ஊதியம் 182 ரூபாயில் இருந்து 202 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், “சராசரியாக 2.26 கோடி மக்களுக்கு வேலை வழங்கப்பட்டிருக்கின்றது. இது சென்ற வருடத்தை விட 114 சதவிகிதம் அதிகமாகும். கிட்டத்தட்ட 1.05 கோடி மக்களுக்கு இந்த மாதத்தில் தினசரி வேலையானது வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஜூன் மாதத்தில் 3.35 கோடி மக்களுக்கு தினசரி வேலை வழங்கப்பட்டது. இது சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 1.74 கோடியை விட 92% அதிகமாக உள்ளது. இந்த வருடம் மே மாதத்தில் 2.51 கோடி மக்களுக்கு தினசரி வேலை வழங்கப் பட்டிருக்கிறது.
இந்த மதிப்பு சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவாகிய 1.45 கோடியை விட 73% அதிகமாகும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 1.86 லட்சம் பஞ்சாயத்துகளில் இருக்கின்றவர்களுக்கு ஜூலை 30ஆம் தேதி வரையில் வேலை கிடைத்திருக்கிறது. மொத்தமாக ஜூலை 30ஆம் தேதி வரையில் 9.24 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 29ஆம் தேதி வரையில் இந்த திட்டத்தின் கீழ் ரூ.50,780 கோடி விதிக்கப்பட்டுள்ளதாக” மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் கூறியுள்ளது.