கொரோனாவால் ஏற்பட்ட மருத்துவ இடையூறுகளால் பிற நோய்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக நாடுகளில் இருக்கக்கூடிய அத்தனை மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் கொரோனாவுக்காகதான் அதிகமான சிகிச்சையை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பிற நோய்களால் தாக்கப்படும் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து லான்செட் மருத்துவ இதழ் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதில், குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மருத்துவ இடையூறுகளால் காசநோய், எய்ட்ஸ் மற்றும் மலேரியா மரணங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மருத்துவ பணிகள் நின்றதால், சரியான நேரத்தில் நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டிய மற்ற நோய்கள் கவனிக்கப்படாமல் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.