முகநூல் காதலால் ஐந்துக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் மீது கணவர் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரையிடம் மயிலாடுதுறையில் வசித்து வரும் 27 வயது மதிக்கத்தக்க டிரைவர் ஒருவர் சர்ச்சைக்குரிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை தான் முகநூல் மூலமாக காதலித்ததாகவும், கடந்த 2018-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தான் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தபோது, தனது வீட்டிற்கு வேறொரு ஆண் வந்து செல்வதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் அந்தப் பெண்ணின் செல்போனை பரிசோதித்துப் பார்த்தபோது, அந்தப் பெண்ணிற்கு திண்டுக்கல்லை மாவட்டத்தை சேர்ந்த பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் பின் அந்தப் பெண்ணை வாலிபர் கண்டித்ததால் தனது தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், விசாரித்ததில் அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே சென்ற போது வீட்டில் இருந்த 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூபாய் 70 ஆயிரம் பணத்தையும் எடுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் டிக்டாக் மற்றும் முகநூலில் தனது பதிவுகளை பதிவிட்டு, அதற்கு பதில் பதிவிடும் இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றியதும், இதுவரை அந்தப் பெண் ஐந்திற்க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்ததும் தெரிய வந்துள்ளது. ஆதலால் அந்தப் பெண்ணை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வாலிபர் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.