மேற்கு வங்கத்தில் ஊர்வலம் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெக்தீப் தங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் வன்முறை சம்பவமும் நடந்தன. இந்த சட்டத்துக்கு முதல்-அமைச்சரும், ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரசினர் நேற்று மிகப்பெரிய ஊர்வலம் நடத்தினர். இதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பங்குப்பெற்றார். இதற்கு ஆளுநர்ஜெக்தீப் தங்கர் கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இந்த நாட்டின் சட்டமான குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முதலமைச்சரும், அமைச்சர்களும் வீதிகளில் ஊர்வலம் செல்வதால் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன். இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இவ்வகையான சட்ட விரோத செயல்களை தவிர்த்து விட்டு, மாநிலத்தின் இயல்பு நிலையை ஒழுங்கு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.