சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது . தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனையடுத்து சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 1ம் தேதி சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல சென்னை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு மண்டலமாக பிரித்து ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நேற்று சென்னையில் உள்ள 15 மண்டலத்திற்கும் கொரோனா சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளனர். அதேபோல அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளை நேற்று தமிழக அரசு நியமித்தது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அன்பும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வனிதாவும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பவானீஸ்வரி ஆகியோர் ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சிறப்பு அதிகாரிகளையும் ராதாகிருஷ்னன் ஒருங்கிணைப்பார் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுடன் இதுகுறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.