வாந்தி எடுத்த குழந்தையின் வயிற்றில் காந்தமணிகள் கிடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டானில் வசித்து வரும் தம்பதிகள் மொஸ்ப்பா காசிம் – அமர் ஷேக். இவர்களுக்கு சல்மா என்ற ஒரு வயது குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் மூவரும் துபாயில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று குழந்தை சல்மாவுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அப்போது மருத்துவர்கள் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் குழந்தையின் வயிற்றில் எட்டு காந்த மணிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்து போன மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் குழந்தை விளையாடும் போது காந்தமணிகளை விழுங்கியிருக்கலாம் என்றும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த காந்தமணிகள் குழந்தையின் வயிற்றில் பல நாட்கள் இருந்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு சீழ் வைத்து இருந்துள்ளது. இதையடுத்து உடனடியாக ஆபரேஷன் செய்ய தயார் செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் வயிற்றில் வெகு நாட்கள் காந்தமணிகள் இருந்ததால் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால் 3 அறுவை சிகிச்சைகளில் அந்த காந்த மணிகள் அகற்றப்பட்டு, குடல் பாதிப்பு சரிசெய்யப்பட்டு குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.