கொரோனா வைரஸ் பிசாசை வீழ்த்துவோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
இதுவரையில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த வைரஸ் தொற்று உச்சத்தை தொடுவதற்கு இன்னும் 10 நாட்கள் ஆகும் என சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,(Tedros Adhanom Ghebreyesus) சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து வைரஸ் பரவாமல் தடுப்பது பற்றி ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம், கொரோனா வைரஸ் ஒரு பிசாசு, அந்த பிசாசை வீழ்த்துவோம் என்று கூறியதாக சீன அரசு நாளிதழ் தெரிவித்துள்ளது.