மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அங்கன்வாடிகளில் நவம்பர் மாதம் முதல் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதனை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் இமர்தா தேவி, “நாங்கள் மகாராஷ்டிராவிற்கு சென்று அங்குள்ள அங்கன்வாடிகளில் ஆய்வு செய்துள்ளோம். 2016ஆம் ஆண்டு முதல் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்கப்பட்டுவருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில்தான் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ளது. அங்கு முட்டைகள் வழங்குவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், மத்தியப் பிரதேசத்தில் உணவை வைத்து அவர்கள் அரசியல் செய்கின்றனர். மத்தியப் பிரதேச குழந்தைகளிடம் அவர்கள் ஏன் பகையை கடைப்பிடிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை. மருத்துவர்களை கலந்தாலோசித்த பிறகே குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்படுகிறது” என்றார்.
இந்தியாவில் 69 விழுக்காடு குழந்தைகள் இறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணம் என யுனிசெப் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில்தான் ஊட்டச்சத்து குறைபாடுகளால் இறக்கும் குழந்தைகளின் விழுக்காடு அதிகமாக உள்ளதாக லான்செட் சைல்ட் மற்றும் அடொலிசன்ட் ஹெல்த் என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்க, மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்குவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துவருவது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது.