அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் 25-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்காக 11 பேர் கொண்ட அறக்கட்டளை குழு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இறுதி தீர்ப்பில்இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ராமர்கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவ வேண்டும், மேலும் கட்டுமான பணிக்கான பணத்தை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த அறக்கட்டளையில் 11 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது. அதன்படி 11 உறுப்பினர்களை தேர்வு செய்து வருகிறார்கள். 11 பேர் கொண்ட குழு யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
ராமநவமி தினத்தில் கட்டுமான பணியை தொடங்க உள்ளனர். அநேகமாக மார்ச் 25-ந்தேதி கட்டுமான பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 25-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 2-ந்தேதி வரை சைத்திர நவராத்திரி தினம் ஆகும்.
இதற்கிடையே ராமர் கோவில் கட்டுமான பணிகளில் எந்தவித தலையீடுகளும் செய்யமாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ளது. அறக்கட்டளை அமைத்ததற்கு பிறகு அதில் சம்பந்தப்படமாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.