அசுர வேகத்தில் பரவிவருகின்ற கொரோனா வைரஸ், மேலும் 5 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2,800 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 82,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் 39-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நிலையில், மேலும் 3 ஐரோப்பிய நாடுகளுக்கும், ஒரு ஆப்பிரிக்க நாடுக்கும், நியூசிலாந்துக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியான தகவல்களின்படி, நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று முதல் முறையாக ஒருவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகிவிட்டது.
அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளான லிதுவேனியா, பெலாரஸ், நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கும் கொரோனா பரவியுள்ளது. இதில், லிதுவேனியா நாட்டில் இத்தாலியில் இருந்து திரும்பிய ஒரு பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.