கொரோனா வைரசால் பல நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவில் அதன் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதன் காரணம் தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவில் மக்கள் தொகை 14.6 கோடி ஆக இருக்கின்றது. மேலும் சீனாவுடன் சுமார் 4,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட எல்லை பரப்பை கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இதுவரை ரஷ்யாவில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் உலகிலேயே கொரோனா வைரசால் பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ள இரண்டாவது நாடு ரஷ்யாவாகும். முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கின்றது. அந்நாட்டில் 0.11% என்ற அளவில் பாதிப்பு இருக்கிறது.
ரஷ்யாவில் இதுவரை 1,33, 101 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தொடங்கியதுமே ரஷ்ய அரசு உடனே மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் அங்கு நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 30 ஆம் தேதிக்கு முன்னதாக சீனாவுடனான அதன் 4,200 கி. மீட்டர் தூர எல்லையை ரஷ்யா மூடியது.
புள்ளிவிவரங்களின்படி அமெரிக்கா மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் மட்டுமே கொரோனா வைரஸ் சோதனையின் வேகத்தை அதிகரித்தது.
ஆனால், அதே நேரத்தில் பிப்ரவரி தொடக்கத்திலிருந்தே விமான நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் ஈரான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பயணிகளை குறி வைத்து அவர்களிடத்தில் சோதனை நடத்தியது ரஷ்யா. இதுபோன்ற காரணங்களால் தான் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தது என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதிநிதி மருத்துவர் மெலிடா உஜ்னோவிக் (Melita Ujnovic) கூறுகையில், ரஷ்யா உண்மையில் ஜனவரி மாத இறுதியிலேயே தனது நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. சோதனை தாண்டி ரஷ்யா பரந்த அளவிலான நடவடிக்கை எடுப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இதனால்தான் இந்த கொடிய வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்