ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான், இத்தாலி தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. அதன்படி ஈரான் நாட்டில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 22 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்குதலால் 141 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இன்று IRNA ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என்றும், 139 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை நேற்று அறிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.