தமிழ்நாடு மின்வாரியத்தின் வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டல தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்துவருபவர் நந்தகோபால். இவர் புத்தாண்டை முன்னிட்டு மின்வாரிய அலுவலர்களிடம் பரிசுப் பொருள்கள் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புக் காவல் துணை கண்காணிப்பாளர் தேவநாதன், ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், விஜய், பிரியா, விஜயலட்சுமி ஆகியோர் உள்பட ஏழு பேர் கொண்ட குழுவினர் இன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள நந்தகோபாலின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு ஓசூர் மின் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஏழு ஊழியர்கள் நந்தகோபாலுக்கு பரிசுப் பொருள்களை லஞ்சமாக கொடுப்பதற்காக வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் அதிரடியாக நந்தகோபால் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில், கட்டுக்கட்டாக பணம், மூட்டை மூட்டையாகப் பரிசுப் பொருள்கள், பழங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஒரு லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம் பணம், 48 கிராம் எடை கொண்ட 11 தங்க நாணயங்கள், வெள்ளி (டம்ளர், குங்குமச் சிமிழ்), 30 ஜோடி பேண்ட் சட்டைகள், 100 கிலோ ஆப்பிள் பழங்களைக் காவல் துறையினர் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, பறிமுதல்செய்யப்பட்ட பணம், பரிசுப் பொருள்கள் குறித்து நந்தகோபாலிடம் காவல் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்காமல் மவுனம் சாதித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, லஞ்சம் பெற்றதாகத் தலைமைப் பொறியாளர் நந்தகோபால் (57), சக ஊழியர்களிடம் லஞ்சப் பணம் வசூலித்து கொடுத்ததாக மேற்பார்வை பொறியாளர் சாக்கன் (57) ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், நந்தகுமார் நான்கு மாவட்டங்களுக்கு தலைமை பொறியாளர் என்பதால் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்வார்.
மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் லஞ்சம் வாங்கும் விவகாரத்தில் மாதம் மாதம் தங்களுக்கு தொல்லை தராமல் இருப்பதைத் தடுக்கவே சக ஊழியர்கள், அலுவலர்கள் நந்தகோபாலுக்கு லஞ்சப் பணம் கொடுத்தது தெரியவந்தது.
மேலும் முழு விசாரணைக்கு பிறகு நந்தகோபால், சாக்கன் ஆகிய இருவரும் கைதுசெய்யப்படலாம் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. புத்தாண்டுக்கு பரிசுப் பொருள்கள் வாங்கியபோது தலைமைப் பொறியாளர் கையும் களவுமாகச் சிக்கிய விவகாரம் வேலூர் மண்டல மின்வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.