பண்ருட்டியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை எஸ்.கே.வி.நகரில் வசித்து வந்தவர் சிவக்குமார் 31 வயதுடைய இவர் ஒரு சிற்ப கலைஞர் ஆவார்.. இவருக்கு சரண்யா(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு விக்னேஷ்(5) மற்றும் தினேஷ்(2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது.
தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டு வந்தார். கடந்த சில தினங்களாக சரண்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார் சிவக்குமார். இதனால் சரண்யா மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்தநிலையில் தான் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சிவக்குமார், நடத்தையில் சந்தேகப்பட்டு சரண்யாவிடம் சண்டை போட்டார். தனது கணவர் தன்னை மீண்டும் மீண்டும் சந்தேகப்பட்டு தகராறு செய்கிறாரே என்று மனமுடைந்து போன சரண்யா சேலையால் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சரண்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தியை அறிந்ததும் வீட்டிலிருந்த சிவக்குமாரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை சம்பவம் பற்றி அறிந்ததும் பண்ருட்டி காவல்துறையினர் விரைந்து வந்து சிவக்குமாரின் உடலையும், மருத்துவமனையில் இருந்த சரண்யாவின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டதால் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.