கேரள மாநிலம் கோழிக்கூடில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறுகையில், அயோத்தி தீர்ப்பை, சபரிமலை தீர்ப்போடு இணைத்துப் பார்க்கும்பொழுது பக்தர்களின் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருப்பதாகத் தெரிகிறது. நீதிமன்றம் அரசியலமைப்பு மீதான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
ஜனநாயக நாடு என்று கருதப்படும் இந்திய நாட்டில் மக்களின் நம்பிக்கையாக இருப்பது நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளும் அதன் அதிகாரங்களும்தான். ஒரு ஜனநாயக நாட்டைப்பொறுத்தவரையில், அரசியலமைப்பு என்பது இறுதி புனித நூலாகும். எதிர்ப்புகளை மீறி செயல்படும் இடதுசாரி போன்ற பல்வேறு அமைப்புகள் நாட்டின் அரசியலமைப்பை முழுவதுமாய் நம்புகின்றன.
இடதுசாரிகள் நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதால் நாட்டின் துரோகிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால், நாட்டை அழிக்க முயற்சிப்பவர்கள்தான் உண்மையானத் துரோகிகளாக இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.