தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தேனி மாவட்டத்தின் ஆவின் நிர்வாகக்குழு தலைவராக துணை முதலவர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக மாவட்டத்தின் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஆவின் விதிமுறைகளை மீறி ஓ.ராஜா_வும், ஆவின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டதாகவும், தலைவர், துணை தலைவர் , உறுப்பினர் என அதில் இருந்த பதவிகளுக்கு ஆளும் அதிமுகவினரை மட்டும் நியமித்துள்ளதாக குற்றம் சட்டி இருந்தார்.
கடந்த காலங்களில் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.பி.எஸ். சகோதரர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதோடு ஆவின் நிர்வாகத்தில் தற்காலிக அல்லது நிரந்தர நிர்வாகக் குழுவை அமைப்பது பற்றி ஆவின் ஆணைய தலைவர் முடிவு எடுக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.