கடந்த 50 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1972-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரின் மேற்கே உள்ள நபேர்விலே என்ற பகுதியில் ஜூலி ஆன் ஹான்சன் ( 15 ) என்ற சிறுமி ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதாவது சம்பவத்தன்று தனது சகோதரரிடமிருந்து சைக்கிளை கடனுக்கு வாங்கி கொண்டு போஸ்பால் விளையாடுவதற்காக சென்ற ஜூலி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கூர்மையான ஆயுதத்தால் உடல் முழுவதும் பல இடங்களில் 36 முறை குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் நபேர்விலே பகுதியில் உள்ள ஒரு சோளக்கொல்லையில் சடலமாக கிடந்துள்ளார் என்று சிகாகோ சன் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிந்த நபேர்விலே காவல்துறையினர் பல வருடங்களாகியும் குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையிலேயே ஜூலி வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவில் வசித்து வரும் 76 வயது முதியவரான பெர்ரி லீ வ்ஹபிளே என்னும் வெல்டிங் தொழிலாளி சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த குற்றத்தை செய்யும் போது வ்ஹபிளே-க்கு 27 வயது இருக்கும் எனவும், டி.என்.ஏ சோதனை மூலமாக இந்த குற்றத்தை செய்தவர் அவர்தான் என்று காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வ்ஹபிளே ஜாமீனில் வெளியில் வருவதற்காக 10 மில்லியன் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கிற்கு விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.