திருட்டு வழக்கில் தலைமறைவான குற்றவாளி பல வருடங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்
புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டி பகுதியில் 1987 ஆம் வருடம் திருட்டு வழக்கு தொடர்பாக செல்லத்துரை உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். அவர்களில் 3 பேர் கைதான நிலையில் செல்லதுரை மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு நீதிமன்றம் செல்லதுறையை தேடப்படும் குற்றவாளி என அறிவித்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் தனித் தனிப் படை அமைத்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பட்டினம் புதிய நம்பியார் நகர் பகுதியில் செல்லதுரை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வியாழனன்று காவல் ஆய்வாளர் தனசேகரன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விரைந்து சென்று செல்லதுரையை கைது செய்தனர். அதன் பின்னர் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா கூறுகையில், “காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினர் மிகச்சிறப்பாக தங்கள் கடமையை செய்து பல வருடங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அவ்வகையில் கடந்த பத்து தினங்களில் மட்டும் வெகு நாட்களாக தேடப்பட்டு வந்த மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்த வருடத்தில் இவ்வாறு ஐந்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் போடப்பட்டு உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.